Monday, February 27, 2012

சென்னைப் போக்குவரத்து நெருக்கடி தீர்க்க முடியாதா?


                 * கோயம்பேட்டிலிருந்து புறப்படும் பேருந்து சென்னையின் எல்லையைக் கடப்பதற்கு இரண்டு மணி நேரத்திற்கு மேலாகிறது. சென்னையின் எல்லையிலிருந்து கோயம்பேடு வரவும் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் ஆகிறது.
* சென்னையின் ஒவ்வொரு முச்சந்தியிலும் நாற்சந்தியிலும் வாகனங்கள் திணறுகின்றன. சாலைகளில் பிதுங்கி வழியும் வாகனங்கள் பீதியூட்டுகின்றன.
* அண்ணா மேம்பாலம் போன்ற அகலமான பாதைகளில்கூட பீக் ஹவர் நேரங்களில் வாகனங்கள் கால் ஒடிந்த ஆமைபோலக் கஷ்டப்பட்டு முன்னேறுகின்றன.
* போக்குவரத்து விளக்கோ போக்குவரத்துக் காவலரோ இல்லாத சிறிய தெருக்களில் வாகனங்கள் தாறுமாறாக ஓடுகின்றன.
* அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் போதாது, போக்குவரத்துக் காவலர்கள் பற்றாக்குறை, போக்குவரத்து விதிகளை மதிக்காத வாகனங்கள், குறுகலான தெருக்கள், தாறுமாறான பார்க்கிங், குண்டும் குழியுமான தெருக்கள். . .
    நாம் வெளியே சென்று விட்டு வீடு திரும்பும்போது. ஒரு போர்க்களத்தில் இறங்கிச் சண்டையிட்டு வெற்றி பெற்ற “மாவீரன்’’ போல ஓர் உணர்வு தோன்றும் என்று ராஜ் செரூபால் (சென்னை சிட்டி கனெக்ட் அறக்கட்டளையின் திட்ட இயக்குனர்) கூறுவது வேடிக்கை அல்ல. இது சென்னை வாழ்வின் யதார்த்தம். காரணம் தலை சுற்ற வைக்கும் போக்குவரத்து நெருக்கடியும் அதில் உள்ள அபாயங்களும்.
    சென்னை என்றதும் சட்டென்று மனதில் தோன்றும் படிமங்களில் அதன் போக்குவரத்து நெருக்கடியும் ஒன்று. எத்தனையோ முறை எத்தனையோ பேர் இது பற்றிப் பேசியும் எழுதியும் போராடியும் வந்திருக்கிறார்கள். ஆனாலும் இதற்கான தீர்வு கைக்குச் சிக்காத புகை போல நழுவிச் செல்கிறது. ஆனால் இதைத் தீர்க்க முடியும் என்று நம்பிக்கையுடன் சொல்லும் ராஜ் செரூபால் தங்களது அமைப்பு இதற்கான திட்டங்களை வைத்திருக்கிறது என்று சொல்லும்போது வயிற்றில் ஆவின் பாலை வார்த்ததுபோல இருக்கிறது.
    மக்களின் அடிப்படைத் தேவைகள் அதிகரிப்பு, வேலைவாய்ப்புகள், கல்வி, பொருளாதார முன்னேற்றம், பெருகிவரும் இடப் பெயர்ச்சி எனச் சென்னையின் சவால்களை அடுக்கிக்கொண்டே போகலாம். மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள சீனா, சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகள் போக்குவரத்துச் சாலைகளை அழகாகப் பராமரிக்கின்றன. சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்குச் செல்லும் ஓர் இந்தியர் அங்குள்ள சாலை வசதிகளை மதித்தல், குப்பைகளைக் குப்பைத் தொட்டியில் போடுதல் போன்ற அந்தந்த ஊரின் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்படுகிறார். ஆனால் இந்தியாவிற்குத் திரும்பி வந்த பிறகு மனநிலை மாறிப் போகிறது.
    சிங்கப்பூர், ஹாங்காங் சாலைகளைப் போலவே சென்னை மாநகரச் சாலைகளையும் மேம்படுத்த முடியும் என்று ராஜ் செரூபால் சவால் விடுகிறார். வெற்றிகரமான முன்னுதாரணங்களுடனும் தெளிவான திட்டங்களுடனும் களம் இறங்கியிருக்கும் சென்னை சிட்டி கனெக்ட் என்னதான் சொல்கிறது? சென்னையின் போக்குவரத்து என்னும் பயங்கரத்துக்கு இவர்கள் சொல்லும் தீர்வு என்ன?
    Adyar Bridgeநகரமயமாக்கல் கொள்கையால் மக்கள் சென்னையில் அதிகம் குடியேறினர். மக்களின் பயன்பாட்டில் சாலை போக்குவரத்து முக்கியப் பங்கு வகிக்கிறது. போக்குவரத்து நெரிசலை சமாளிக்கப் பாலங்கள் கட்டப்பட்டன. மெட்ரோ ரயில் பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இருப்பினும், பிரச்சினைகள் தீர்ந்தபாடில்லை. இதைத் தீர்க்கத் தொலை நோக்குப் பார்வையில் வழி சொல்கிறார். ITDP என்னும் உலக தன்னார்வுத் தொண்டு அமைப்பின் இந்தியாவின் மண்டல இயக்குநர் ஸ்ரேயா கடபள்ளி.
    * சென்னை நகர்ப்புறச் சாலைகளைச் சரியான வகையில் பயன்படுத்த வேண்டும். பாதசாரிகள் நடப்பதற்கென்று அமைக்கப்படும் நிலப்பரப்பில் ஆக்கிரமிப்பு இல்லாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
    * வெளிநாடுகளில், நடைபாதைக் கடைகள் வைத்துகொள்வதற்கு என்றும் பாதசாரிகள் நடப்பதற்கு என்றும் நிலப்பரப்பை அகலப் படுத்துகின்றனர். அந்த வழிமுறையை இங்கேயும் பின்பற்றலாம்.
    * மக்கள் வாழும் குடியிருப்பு வளாகங்களிலேயே வணிக வளாகங்கள், அலுவலகம், கல்வி நிறுவனங்கள், பொழுது போக்கு மையங்கள் என்று அடிப்படைக் கட்டமைப்புகள் அமைந்தால் பயணப் போக்குவரத்தால் ஏற்படும் சிரமங்களை வெகுவாகக் குறைக்கலாம்.
    * வாகனப் புகையினால் ஏற்படும் சுற்றுச் சூழல் பாதிப்பிலிருந்து நாம் நம்மைக் காத்துக் கொள்ள சைக்கிளின் பயன்பாட்டை அதிகப்படுத்தலாம்.
    அரசுப் பேருந்துகள்
    ஏழை, எளியோர் அதிகம் பயணம் செய்யும் அரசுப் பேருந்துகள் சாலைப் போக்குவரத்தில் முக்கிய இடம் வகிக்கின்றன. அனைத்து வழித் தடங்களுக்கும் எளிதாகச் செல்வதற்கு ஏற்ப அதிக எண்ணிக்கையில் பேருந்துகள் விடப்பட வேண்டும். சாலைகளைச் சீரமைத்தலும், அரசுப் பேருந்து ஊழியர்களுக்கு அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்தலும் அவசியம். வசதி படைத்தவர்களும் காருக்குப் பதில் பேருந்துகளில் பயணிக்கும் வகையில் அதி நவீனப் பேருந்துகளை இயக்கலாம்.
    இன்றைய காலகட்டத்தில் சென்னையில் 6000 பேருந்துகளை இயக்கினால், அன்றாடம் பேருந்தில் ஏற்படும் கூட்ட நெரிசலைக் குறைக்கலாம்.
    சிட்டி கனெக்ட் கூறும் யோசனைகளை அரசு விவாதத்துக்காவது எடுத்துக்கொள்ளுமா? மாற்றம் வருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுமா? சென்னைத் தெருக்களின் பீதியூட்டும் நெருக்கடி சற்றேனும் தணியுமா? 
                                                                                                                               இவன்
                                                                                                                     மணிகண்டன் B.E

    No comments:

    Post a Comment