Monday, February 27, 2012

சாலைகளுக்குச் சாப விமோசனம்?



              சென்னையில் நல்ல சாலைகளைப் பார்ப்பது அரிது. போடப்படும் சாலைகளும் பல்வேறு காரணங்களால் விரைவிலேயே தோண்டப்பட்டு விடுகின்றன. மிச்சம் மீதியை மழை அடித்துக் கொண்டு போகிறது. பல ஆண்டுகளாக இதுவே சென்னையின் யதார்த்தம்.
சாலைகளின் அற்பாயுளுக்கு முடிவு கட்டும் நோக்கில் சென்னை மாநகராட்சி ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளது. நீண்ட காலம் தாக்குப் பிடிக்கக்கூடிய வகையில், தாருடன் பிளாஸ்டிக் கலந்த தொழில்நுட்பத்துடன் சாலைகளை அமைக்க மாநகராட்சி முடிவு செய்திருக்கிறது. முதல் கட்டமாக, சென்னை தி.நகர் சர். பிட்டி தியாகராசர் அரங்கிற்கு அருகே உள்ள லட்சுமணன் சாலை பிளாஸ்டிக் சாலையாகப் போடப்பட்டுள்ளது. இந்தப் பணியைச் சென்னை மேயர் சைதை சா. துரைசாமி துவக்கிவைத்தார்.
குப்பைகளிலிருந்து பிரித்து எடுக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு சாலை அமைப்பதற்கான செயல் விளக்கக் கருத்தரங்கமும் பிளாஸ்டிக் சாலை அமைக்கும் பணியைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியும் தியாகராசர் கலையரங்கில் ஜனவரி 4 அன்று நடந்தது.
“குப்பைகளை அகற்றுவது, சாலைகளைச் சீரமைப்பது ஆகியவற்றைச் சவாலாக எடுத்துக்கொண்டுள்ளோம். துறை வாரியாக ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. பிளாஸ்டிக் சாலை அமைத்தால் தரமாக இருக்கும். பொருளாதார ரீதியாகச் செலவும் மிச்சமாகும். குப்பைகள் இனி கண்ணுக்கே தெரியாத அளவிற்கு ஆவதற்கும் தரமான சாலைகள் அமைக்கவும் மாநகராட்சி முன்னோடியான திட்டங்களைச் செயல்படுத்த உள்ளது. மிக விரைவில் குப்பையில்லாத, மழைநீர் தேங்காத சென்னை உருவாக்கப்படும்” என்று மேயர் பேசினார்.
பிளாஸ்டிக்கைக் கொண்டு அமைக்கும் சாலை நீண்ட காலம் நீடிக்கும் என்பதைக் கண்டறிந்த மதுரை தியாகராஜர் கல்லூரி முதல்வர் வாசுதேவனின் நேரடி ஆலோசனையின்படி இந்தச் சாலை போடப்பட்டது.
பிளாஸ்டிக் சாலை எவ்வாறு போடப் படுகிறது? வாசுதேவன் விளக்குகிறார்: “இயந்திரத்தில் போட்ட சாலை போடும் சிறு சரளைக் கற்கள், 170 டிகிரி செல்சியஸ் சூடானதும், சிறு சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட பிளாஸ்டிக் குப்பை தூவப்படுகிறது. அவை உருகியதும், தார் ஊற்றிக் கலவை தயாரிக்கப்பட்டு, சாலை போடப்படுகிறது. பிளாஸ்டிக்கின் பிடிப்புத் தன்மை காரணமாக, பத்து ஆண்டுகளுக்கு மேல் சாலைகள் சேதமடையாமல் இருக்கும்.”
பிளாஸ்டிக் சாலைகளால் பொருளாதார ரீதியாகவும் பலனுள்ளது. ஒரு சாலை அமைக்கப் பத்து டன் தார் தேவை என்றால் பிளாஸ்டிக் சாலைக்கு ஒன்பது டன் போதும். மீதி ஒரு டன்னுக்குப் பிளாஸ்டிக் போடலாம். ஒரு டன் தார் விலை 46 ஆயிரம் ரூபாய். ஒரு டன் பிளாஸ்டிக் குப்பை 16 ஆயிரம் ரூபாய். சென்னையில், சேகரிக்கப்படும் குப்பையில், 3 சதவீதம் பிளாஸ்டிக், 60 சதவீதம் தாவரம் சார்ந்த பொருட்கள் உள்ளன. பிளாஸ்டிக்குகளை சாலை போடவும், தாவரப் பொருட்களை உரம் தயாரிக்கவும் பயன்படுத்தலாம் என்று வாசுதேவன் கூறியிருக்கிறார்.
“சென்னையில், 118 பஸ் செல்லும் சாலைகள், 1,498 உட்புறச் சாலைகள் என மொத்தம், 370 கி.மீ., நீளமுள்ள, 1,616 சாலைகள், 110 கோடி ரூபாயில், பிளாஸ்டிக் சாலைகளாகப் போடப்பட உள்ளன” என்று மாநகராட்சி அதிகாரிகள் கூறு கிறார்கள். இது தவிர, முக்கிய சாலைகள் அனைத்தையும், கான்கிரீட் சாலைகளாக மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கிறார்கள்.
பிளாஸ்டிக் சாலைகள் அமைக்கும் பணி மூன்று மாதங்களில் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. லட்சுமணன் சாலைக்கு அடுத்த படியாக வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, நெல்சன் மாணிக்கம் சாலை களில் பிளாஸ்டிக் கலந்து சாலை போடும் பணியும் தொடங்கப் பட்டது.
சாலைகள், இயந்திரத்தால் தோண்டப்பட்டு, 5 செ.மீ. அளவுக்கு சரளைக் கற்கள் கொட்டிச் சமன் செய்யப்பட்டு. இதன் மேல், 4 செ.மீ. அளவில் பிளாஸ்டிக், தார் கலந்த சிறு சிப்ஸ் கற்கள் கொண்டு சாலை போடப்படுகிறது.
அண்ணா நகர் மேற்கு பள்ளிச் சாலை, பெரம்பூர் நெடுஞ்சாலை, கிரீம்ஸ் சாலை, தாலுகா அலுவலக சாலைகளிலும், சேதமடைந்த பகுதிகளில் இந்த முறைப்படி சாலைகள் அமைக்கப்பட்டுவருகின்றன.
குப்பைகளிலிருந்து பிரித்தெடுக்கப்படும் கேரி பேக், டீ கப், தெர்மாகோல், ஆவின் கவர், சோப்புத் தூள் அடைக்கப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் ஆகிய கழிவுகள் சேகரிக்கப்படும். இவை அனைத்தும் இயந்திரத்தின் மூலம் 2 முதல் 3 மி.மீ. அளவிற்கு துகள்களாக மாற்றப்படும். இந்தத் துகள்கள் மிக்சிங் மிஷினில் போட்டு கருங்கல் ஜல்லியுடன் கலக்கி சூடாக்கப்படும்.இத்துடன் தார்க் கலவை கலந்து சாலை அமைக்கப்படும். இப்படி அமைக்கப் படும் சாலை தரமானதாக, பராமரிப்புச் செலவு குறைவானதாக இருப்பதோடு, நீண்ட காலம் நீடித்தும் இருக்கும். பிளாஸ்டிக்கைத் துண்டு துண்டாக நறுக்கும் ஒரு இயந்திரம் இதற்கென ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் சாலை அமைப்பதற்கு வேண்டிய அடிப்படைப் பொருள் பிளாஸ்டிக் கழிவுகள். இவை அழுக்கில்லாமலும், காய்ந்த நிலையிலும் இருத்தல் வேண்டும். பிளாஸ்டிக் சாலைகளை அமைப்பதற்காகத் தேவைப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்க வருகின்ற சென்னை மாநகராட்சியின் துப்புரவுப் பணியாளர்களுக்கு சென்னை மாநகர பொதுமக்கள் முழு ஒத்துழைப்புத் தர வேண்டும் என்று சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுக்கிறது.
பிளாஸ்டிக் கழிவுகளைச் சேகரிப் பதற்காக, சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் தலா ஒரு தொட்டி வைக்கப்பட்டுள்ளது. வீடு வீடாக சென்று பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் பணியில் ஈடுபடும் துப்புரவு பணியாளர்களுக்குத் தனியாக ஒரு தொட்டி அளிக்கப்படும். பிளாஸ்டிக் கழிவுகளைப் பிரித்து துப்புரவுப் பணியாளர்களிடம் அளிக்குமாறு பொது மக்களைச் சென்னை மாநகராட்சி கேட்டுக்கொண்டிருக்கிறது.
“பிளாஸ்டிக்கைக் கலந்து போட்டா லும் சரி, இரும்புத் துகளைக் கலந்து போட்டாலும் சரி முதலில் சாலைகளைப் போட வேண்டும். உதாரணத்துக்கு, வேறு வழியில்லாமல் நான் தினமும் உபயோகிக்கிற ஆற்காடு சாலையைச் சொல்ல வேண்டும். அதைச் சாலை என்றே சொல்லக் கூடாது அங்கேதான் சாலையே இல்லையே?’’ என்கிறார் வளசரவாக்கத்தைச் சேர்ந்த விற்பனைப் பிரதிநிதி கே. ரவி.
பிளாஸ்டிக் சாலைகளைப் பற்றிப் பொதுமக்கள் பலருக்கும் இதே போன்ற அவநம்பிக்கை இருப்பதை உணர முடிகிறது. ‘‘என்னென்னமோ செய்து பார்க்கிறார்கள். ரோடு நல்லா இருந்தால் சரி. குண்டும் குழியுமான சாலைகளில் வண்டி ஓட்டி முதுகு வலி வந்ததுதான் மிச்சம்’’ என்கிறார் வியாசர்பாடியைச் சேர்ந்த ஆசிரியர் எஸ். சந்திரன்.
மோசமான சாலைகளைப் பார்த்துப் பார்த்து மனம் வெறுத்துப்போன பொது மக்களுக்கு இத்தகைய அவநம்பிக்கை ஏற்படுவது இயல்புதான். சென்னை மாநகராட்சியின் இந்தப் புதிய முயற்சி வெற்றி பெற்றால்தான் சாலைகளின் தோற்றம் மேம்படும். வளசரவாக்கம் ரவியைப் போன்றவர்களின் அவநம்பிக்கையும் விலகும். 

No comments:

Post a Comment