Wednesday, March 07, 2012

அமெரிக்காவுக்கு கெட்ட நேரம்.. இந்தியாவுக்கு (கொஞ்சம்) நல்ல நேரம்!


Obama and Manmohan Singhஅமெரிக்காவின் கடன் தர வரிசை (credit rating) குறைக்கப்பட்டதையடுத்து உலகெங்கும் பங்குச் சந்தைகள் ஆட்டம் கண்டு வருகின்றன.

அமெரிக்காவின் வாங்கும் திறனும் முதலீடு செய்யும் பலமும் குறையும் என்ற அச்சத்தில் அமெரிக்காவைச் சார்ந்த தொழில்களின் பங்கு விலைகள் மிக வேகமாக சரிந்து வருகின்றன. அதில் முக்கியமானவை சாப்ட்வேர் நிறுவன பங்குகள். அடுத்ததாக உலகம் முழுவதுமே கட்டுமானத் திட்டங்களும் பாதிக்கப்படலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் இரும்பு நிறுவன பங்குகள், ரியல் எஸ்டேட் நிறுவன பங்குகளும் வீழ்ச்சி அடைந்து வருகின்றன.

அதே போல அமெரிக்காவில் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருளுக்கான தேவையும் குறையாலாம் என்ற கருத்தின் அடிப்படையில் உலகளவில் பெட்ரோலிய கச்சா எண்ணெயின் விலையும் சரிந்துவிட்டது.

கடந்த இரு நாட்களில் கச்சா எண்ணெயின் விலை பாரல் ஒன்றுக்கு 10 டாலர் வீழ்ச்சியடைந்து 76 டாலருக்கு சரிந்துவிட்டது. கடந்த 6 மாதமாக 100 டாலருக்கும் அதிகமாகவே இருந்து வந்த கச்சா எண்ணெய் முதல் முறையாக விலை குறைந்துள்ளது.

உலகிலேயே மிக அதிகமான பெட்ரோலியத்தை பயன்படுத்தும் நாடு அமெரிக்கா தான். அங்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பெட்ரோலியத்துக்கான தேவை குறையலாம் என்ற யூகத்தில் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளதே தவிர, உற்பத்தி அதிகமானதால் குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நான் நேற்றே சொன்னது மாதிரி (அமெரிக்காவுக்கு நேரம் சரியில்லை... உலகத்துக்கும் தான்.!) அதே நேரத்தில் தங்கத்தின் விலை ஒரே நாளில் 10 கிராமுக்கு ரூ. 2,000 வரை உயர்ந்துவிட்டது. இன்று 10 கிராம் தங்கத்தின் விலை ரூ. 26,198. இது இன்னும் மேலே போகலாம்.

அதே நேரத்தில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து மேலும் சரியவும் வாய்ப்புள்ளது. ஆனால், சர்வதேச அளவில் விலை உயர்ந்தவுடன் நள்ளிரவிலேயே பெட்ரோல் விலையை உயர்த்தும் மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள், இந்த முறை கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளதால், பெட்ரோல், டீசல் விலையை உடனடியாகக் குறைத்தாக வேண்டும்.

இதன்மூலம் இந்தியாவின் பணவீக்கம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா தனது பெட்ரோலியத் தேவையில் 75 சதவீதத்தை இறக்குமதி செய்து தான் சமாளித்து வருகிறது. எப்போதெல்லாம் கச்சா எண்ணெய் விலை உயர்கிறதோ அப்போதெல்லாம் விலைவாசியும் உயர்ந்து பணவீக்கம் அதிகரிக்கிறது. இப்போது கச்சா எண்ணெய் விலை சரிவால் டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை குறைய வாய்ப்புள்ளது. இதனால், இந்தியாவில் பணவீக்கம் குறையும் என்கிறார்கள்.

நீண்டகால அடிப்படையில் இல்லாவிட்டாலும், 6 முதல் 12 மாதங்களுக்கு இந்தியாவுக்கு நிச்சயமாக சாதமாகவே அமையலாம்.

அதே நேரத்தில் நீண்டகால அடிப்படையில் பார்த்தால் அமெரிக்காவில் நிலவும் சிக்கல்கள் இந்தியா உள்ளிட்ட எந்த நாட்டுக்குமே நல்லதில்லை என்பதே உண்மை. அமெரிக்காவின் கடன் தர வரிசை AAAவிலிருந்து AA ஆகக் குறைக்கப்பட்டதால், அந்த நாட்டுக்கு கடன் கிடைப்பதில் மட்டுமல்லாமல், அமெரிக்காவில் இருந்து கடன் வாங்குவதும் சிரமமானதாகிவிடும்.

இதனால், அமெரிக்க முதலீடுகளை எதிர்பார்த்துள்ள இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளும் அதன் தாக்கத்தை உணர வேண்டிய நிலை நிச்சயம் வரும்.

இந் நிலையில் அமெரிக்காவின் தரத்தை ஸ்டாண்டர்ட் அண்ட் புவர் நிதி தரவரிசை அமைப்பு குறைத்ததற்கு இன்னொரு சர்வதேச நிதி ஆலோசனை அமைப்பான போர்ப்ஸ் வன்மையாக கண்டித்துள்ளது.

''ஸ்டாண்ட்ர்ட் அண்ட் புவரின் செயல் முழுக்க முழுக்க அரசியல்ரீதியிலானது. அமெரிக்காவின் கடன் வாங்கும் உச்ச வரம்பை நிர்ணயிப்பதில் குடியரசுக் கட்சியினரும் ஜனநாயகக் கட்சியினரும் நாடாளுமன்றத்தில் நடத்திய அரசியலை மட்டும் கருத்தில் கொண்டு இந்தச் செயலை செய்துள்ளனர். உண்மையில் அமெரிக்கா AAA தரத்தில் தான் உள்ளது'' என்று கூறியுள்ளது போர்ப்ஸ்.

அதே போல உலகின் டாப் பணக்காரர்களில் ஒருவரான முதலீட்டாளர் வாரன் பஃபெட்டும் ஸ்டாண்ட்ர்ட் அண்ட் புவரின் செயலை கண்டித்துள்ளார், அமெரிக்காவுக்கு நான் மூன்று அல்ல, நான்கு (A AAA) போடுவேன் என்று கூறியுள்ளார்.

இது குறித்து பிரான்ஸ் நிதியமைச்சர் பிரான்காய்ஸ் பரோயின் கூறுகையில், ஸ்டாண்டர்ட் அண்ட் புவர் மட்டும் தான் அமெரிக்காவின் தரத்தைக் குறைத்துள்ளது. ஆனால், அதற்கு இணையான உலகின் மற்ற இரு நிதித் தரவரிசை நிறுவனங்களான மூடிஸ் (Moody's) மற்றும் ஃபிட்ச் (Fitch) ஆகியவை அமெரிக்காவின் தர வரிசை இன்னும் AAA என்ற நிலையிலேயே இருப்பதாகத் தெரிவித்துள்ளன என்று கூறியுள்ளார்.

இந் நிலையில் பிரான்ஸ் நாட்டிலும் நிலைமை சரியில்லை என்பதால், அதன் பொருளாதாரத்தை உன்னிப்பாக கவனித்து வருகின்றன நிதி அமைப்புகள். விரைவில் அதன் AAA தரமும் அமெரிக்காவுக்கு இணையாக AA ஆக குறைக்கப்படலாம் என்கிறார்கள்.

No comments:

Post a Comment