Wednesday, February 29, 2012

கபாலீஸ்வரர் கோவில்: பூலோகத்தில் ஒரு கயிலாயம்


சென்னையின் புராதானச் சின்னங்களில் ஒன்றான கபாலீஸ்வரர் இக்கோவிலில் சிவன் கபாலீஸ் வராகவும் சக்தி கற்பகாம்பாளாகவும் காட்சி அளிக்கின்றனர்.
இத்தலத்தில் பார்வதி மயில் உருவத்தில் சிவனை வழிபட்டதால் இவ்வூருக்கு மயிலாப்பூர் என்ற பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது. இக்கோயில் ஆயிரம் ஆண்டுக்கு மேற்பட்ட பழம் பெருமை கொண்டது. கி.பி. ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. முன்பு இக்கோவில் கடற்கரை ஓரத்தில் அமைந்திருந்தாகவும் போர்த்துக்கீசியர் ஆட்சிக் காலத்தில் இடிக்கப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது. தற்போதைய கோவில் 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது.
பிரம்மன் கர்வத்துடன் சிவனை அவமானப்படுத்தியதால் சிவன் கோபமடைந்து பிரம்மனின் தலைகளில் ஒன்றைக் கிள்ளி எறிந்து விட்டாராம். படைக்கும் திறனையும் இழக்கச் செய்தாராம். பிரம்மன் தன் தவறை உணர்ந்து பாவ மன்னிப்பு வேண்டித் தானே லிங்கத்தை உருவாக்கி இத்தலத்தில் வைத்து பூஜைகள் செய்தாராம். சிவன் மனம் இரங்கி, படைக்கும் திறனையும் தலையையும் திரும்பித் தந்தாராம். அப்போது கபாலம் அணிந்த சிவனை கபாலீஸ்வரர் என்று பிரம்மன் போற்றியுள்ளார். அது முதல் கபாலீஸ்வரர் என்ற பெயர் வந்ததாகத் தல புராணம் கூறுகிறது.
இக்கோவிலில் இன்னொரு ஐதீகமும் நிலவுகிறது. சிவனேசச் செட்டியார் என்னும் அடியார் தனது மகளான பூம்பாவையைத் திருஞானசம்பந்தருக்கு மணம் முடிக்க எண்ணியிருந்தார் ஆனால் ஒருநாள் பூம்பாவை பாம்பு தீண்டி இறந்துவிட்டாள். சிவனேசச் செட்டியார் பெண்ணின் அஸ்தியைக் கலயத்தில் வைத்துப் பாதுகாத்து வந்திருக்கிறார். ஞானசம்பந்தர் மயிலாப்பூர் வந்தபோது அவரிடம் கலயத்தைக் காட்டித் தன் துக்கத்தைக் கூறியுள்ளார். ஞானசம்பந்தர் கலயத்தைக் கபாலீஸ்வரர் கோயில் முன் வைத்து தேவாரப் பதிகம் பாடி அப்பெண்ணை உயிர்பெற்று எழ வைத்தார். ஆனால் அவளை மணம் செய்ய மறுத்து, கோயிலில் தொண்டாற்றும்படி கூறிவிட்டுச் சென்றுவிட்டார். பூம்பாவைக்கென இந்த ஆலயத்தில் ஒரு சிறிய சன்னதி உள்ளது.
1968இல் இங்கு நடந்த தேர் உற்சவத்தை இந்தியா பற்றிய தனது ஆவணப் படத்திற்காக உலகப் புகழ் பெற்ற பிரஞ்சுத் திரைப்பட இயக்கு நர் லூயிமால் படம் பிடித்துள்ளார். இக்கோவிலில் வருடம் முழுவதும் விழாக் கோலம்தான். பங்குனி மாதத்தின் பங்குனிப் பெருவிழா மிக முக்கியமானது. இதில் தேர் உற்சவம். அறுபத்து மூவர் வீதி உலா போன்றவை விஷேசமானவை. இங்கே விமரிசையாகக் கொண்டாடப்படும் மற்றொரு விழா சிவராத்திரி.
பூலோகக் கயிலாயம் என்று புகழப்படும் இந்த ஆலயத்தின் மற்றொரு முக்கிய விசேஷம் பிரதோஷம். பிரதோஷப் பொழுதில் சிவனை வழிபட்டால் நாம் செய்த பாவங்கள் அனைத்தும் விலகும், வேண்டுவது அத்தனையும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
                                                                                                                               
                                                                                                                            இவன்
                                                                                                                 மணிகண்டன் B.E

1 comment:

  1. தம்பி டீ இன்னும் வரல...........

    ReplyDelete