Monday, March 05, 2012

தலைநகரத்தின் வீதிகளும் நீதிகளும்

சென்னை, தமிழ்நாட்டின் தலைநகரமாக மட்டும் இல்லை. ஒரு காலத்தில் தமிழர்க்கும், ஆந்திரர்க்கும், கன்னடர்க்கும், மலையாளிகளுக்கும்கூட இது தலைநகரமாக இருந்தது. சரியாகச் சொன்னால், தென் இந்தியாவின் ஒரு பகுதிக்குத் தலைமை நகரமாக இருந்தது சென்னை. மாகாணப் பிரிவினைகள் நடந்தபோது, ஆந்திரர்கள் சென்னையைத் தமக்குக் கேட்டார்கள். பொட்டி ஸ்ரீ ராமுலு நாயுடு என்கிற தியாகி, இதற்காகவே உண்ணாவிரதம் இருந்து உயிரைக் கொடுத்தார். அப்போது ம.பொ. சிவஞானம், தலை கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம் என்கிற போராட்டத்தில் இறங்கினார். அவரால், தலைநகர் சென்னை தமிழ்நாட்டுக்குக் கிடைத்தது. திருப்பதியைத் தமிழர்கள் ஆந்திராவுக்கு விட்டுச் கொடுக்கும் படியாக ஆனது. திருத்தணியையும் குமரி மாவட்டத்தையும் நாம் மீட்க முடிந்ததே பெரிய சாதனை.


ஒரு போராட்டத்துக்குப் பிறகே சென்னை நமக்குக் கிடைத்தது. தமிழ்க் கலைகளில், தமிழ்ப் பண்பாட்டின், தமிழ் சினிமாவின் தலைமை இடமாக இன்று சென்னை மிளிர்கிறது. தமிழ் மண்ணில் வாழ்கிற தமிழர்களின் கனவு பூமியாகவும் சென்னை மிளிர்கிறது.
சென்னையை நோக்கி மூன்று வகையான மனிதர்கள் தினம் தினம் வந்துகொண்டே இருக்கிறார்கள். அரசுகளின் மக்கள் விரோதப் போக்குகளால், நிலத்தோடு வாழ்ந்தவர்கள் குடிபெயர்ந்து பிழைப்புத் தேடிச் சென்னைக்கு வருகிறார்கள். சினிமாவில் சாதிக்க ஆசைப்படுபவர்களும் வருகிறார்கள். அரசியலில் இருக்கும் சிறு, மற்றும் குறுந்தலைவர்கள் தங்கள் தலைமைக் கம்பெனிகள் இருக்கும் சென்னைக்கு வருகிறார்கள். கல்வி தொடர்பாக, வியாபாரம் தொடர்பாக வருபவர்கள் என்றும், எந்த நோக்கமும் இல்லாமல் ‘சும்மா’ வருகிறவர்களுமாகச் சென்னை ஒரு திறந்த வெளித் தலைநகரமாகத் திகழ்கிறது.
சென்னை இப்போது மேலே வாகனங்கள் சஞ்சாரம் செய்யும் மேம்பாலங்கள் மலிந்த நகரமாக மாறிக்கொண்டிருப்பது வரவேற்கத்தக்க விஷயம்தான். ஆனால் கீழே, மனிதர்கள் பாதுகாப்பாக நடக்க ஒரு நடைபாதை இல்லை. நடைபாதை, தேவையற்ற விஷயம் என்று அதிகார வர்க்கம் நினைக்கிறது போலும். உலாவழிக்கு மட்டும் நடக்கிற அவர்களுக்கு, வாழ்நாள் முழுக்க நடந்தே வாழ வேண்டியவர்களுக்கான மக்களைப் பற்றி அரசு நினைக்கவே நேரம் இல்லை என்றே தோன்றுகிறது.
ஐரோப்பிய, ஏன் சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும்கூட, நடப்பவர்க்கும் சைக்கிள்காரர்களுக்கும் தனித்தனிப் பாதைகள் இருப்பதைப் பார்க்க நேர்கிறபோது மனம் மகிழ்கிறது. அரசின் மனங்களில், மக்கள், அவர்கள் பற்றிய நினைவு இருக்கிறது என்பது எனக்கு ஆறுதல் தருகிறது.
குழந்தைகள் விளையாடும் இடங்களில், அவை விழும். எழும். அடிபடும். இதெல்லாம் இயற்கைதான். அரசு இதில் என்ன செய்ய முடியும்? முடிந்திருக்கிறது. அந்த விளையாட்டுப் பகுதியில், ரப்பராலான தரை போட்டிருந்தது சிங்கப்பூர் அரசு. அந்த மனோபாவம் எனக்குப் பிடிக்கிறது. ஏன் நம் அரசுகள் அப்படிச் சிந்திப்பது இல்லை?
அங்கு வாழும் ஒரு எழுத்தாளர் என்னிடம் கேட்டார்: அண்ணா சாலை சுமார் ஆறு மைல் நீளம். ஆனால் அந்தத் தெருவில் எங்கும் பெண்கள் கழிப்பிடம் இல்லையே, ஏன்? அவசரம் என்றால் சிறுநீர் கழிப்பது எப்படிச் சாத்தியம்?’
ஒரு குழந்தை, குப்பையை, தேவை இல்லாதவைகளை எங்கு போடுவது என்பதை வகுப்புகளில் கற்கிறது. சென்னையோ, குப்பை மேட்டுக்குள்தான் வாழ்கிறது. வெயிலின் உக்ரத்தையும், புழுதிகளின் தாக்கத்தையும் தவிர்க்க வல்லவை மரங்கள். நம் தலைநகரத்தின் பல தெருக்கள் மரங்கள் அற்று மொட்டையாகவே நிற்கின்றன. வாகனங்கள் எந்த ஒழுங்கும் அற்றுப் பைத்தியம் போல அலைந்து போக்குவரத்தைச் சிதைத்துக்கொண்டிருக்கின்றன.
இவை எல்லாம் ஐரோப்பியர் பார்வையில் நம் மேலே அவர்கள் வைக்கும் விமர்சனம், இவை எல்லாம் தவிர்க்க முடிந்தவையே. மக்கள் பெருக்கமும், வறுமையும்தான் இவற்றுக்கெல்லாம் காரணம் என்று இதயத்தில் ஈரம் அற்ற அறிவாளிகள் கூறக்கூடும். நாம் அதை ஒப்ப முடியாது. மக்கள் ஒரு தேசத்தின் வலிமை. வறுமை, அரசுகள் உருவாக்கிய கயமை. அரசுகள் மக்களை நேசிக்க மறுத்ததும், திட்டங்களும் செலவினங்களும் ஒரு சாராரின் முன்னேற்றத்தை மட்டும் குறி வைத்ததும், ஊழல் மலிந்த நிர்வாகத்தாலும் விளைத்த விளைவுதான் வறுமை. அது இயற்கையானதல்ல.
சென்னையின் அழகு, கூவம் ஆற்றின் ஓரங்களில் குடியிருக்கும் மக்களால் குலைந்து போகிறது என்பதும், அவர்களை அங்கிருந்து குடிபெயர்த்தலும் மனிதத் தன்மை கொண்ட காரியம் அன்று. அந்த மக்களுக்குரிய வாழ்வாதாரங்களைச் செய்வதே அரசின் கடமை. கூவம் என்கிற அழகிய ஆற்றை, தன் தொழிற்சாலைக் கழிவுகளைக் கொட்டிச் சாக்கடை ஆக்கிய நிறுவன முதலாளிகள் மேல் அரசின் சீற்றம் இன்றுவரை ஏன் திரும்பவில்லை? அரசு, அந்தக் களைகளையே முதலில் நீக்க வேண்டும்.
நமது சென்னையின் அழகை எப்படிக் கூட்ட முடியும்? மரம் நடுவது மட்டும் அல்ல. செடி வைத்துத் தண்ணீர் ஊற்றாமல் காய வைப்பதால் அல்ல. பொம்மைகளாகிய சிலை வைப்பதில் அல்ல. சுவர்களில் இரண்டாம் தரமான படம் வரைவதால் அல்ல. மனித மனங்களின் ஆதார சுருதியை ஒரு அரசு உணர்ந்து, அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து, உணவு தேடுதல் என்கிற குகை வாழ்க்கைப் பழக்கத்திலிருந்து விடுபட்டு அதற்கும் மேலான உலகங்களைக் கட்டுவதாக ஒரு அரசின் பணி இருக்க வேண்டும்.
மனிதர்களின் உள்ளார்ந்த அசைவுகளில் கலை மனம் இருக்கவே செய்கிறது. எல்லா மக்களிடமும் அந்தக் கலை உணர்வு இருக்கவே செய்கிறது. அதைத் தொட்டு, அதை விழித்தெழச் செய்வதே அரசின் கடமையாகஇருக்க முடியும். மனிதர்களின் மனங்களில் அழகு குடியேறாமல், ஊரை அழகுபடுத்தி என்ன பயன்?

No comments:

Post a Comment