Wednesday, March 07, 2012

அபாய கட்டத்தில் தமிழகத்தின் 2வது மாபெரும் ஏரி!


Pulicat Lake Flamingosதமிழகத்தின் இரண்டாவது மிகப் பெரிய ஏரியான பழவேற்காடு ஏரியின் சுற்றுச்சூழல் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அது அபாய நிலையில் உள்ளதாகவும் சர்வதேச இயற்கை நிதியம் (Global Nature Fund) அறிவி்த்துள்ளது.

தென்னிந்தியாவின் கோரமண்டல் கடற்கரையில் அமைந்துள்ள மிக முக்கியமான ஏரி இது. இந்தக் கடற்கரையில், கடலுடன் ஒட்டிய உவர் நீர் கொண்ட முக்கிய ஏரிகளில் ஒன்று தான் பழவேற்காடு ஏரி எனப்படும் புலிக்காட் ஏரி.

இஸ்ரோவின் சதீஷ் தவான் ராக்கெட் ஏவு தளம் அமைந்துள்ள ஸ்ரீஹரிகோட்டா தீவு தான் இந்த ஏரியை கடலில் இருந்து பிரிக்கிறது. ஆந்திரா-தமிழக எல்லையில் அமைந்துள்ள இந்த ஏரியில் பறவைகள் சரணாலயமும் அமைந்துள்ளது.

1ம் நூற்றாண்டில் தென் இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் மிக முக்கிய துறைமுகமாகவும் விளங்கிய ஏரி இது. 2ம் நூற்றாண்டின் மாபெரும் வானியல் வல்லுனரான டாலமியும் இப் பகுதியில் தனது ஆய்வுக்காக பயணித்தபோது இந்த ஏரி குறித்தும் தனது குறிப்புகளில் விளக்கியுள்ளார்.

அரேபியர்கள், போர்ச்சுகீசியர்கள், டச்சுக்காரர்கள் என அடுத்தடுத்து பல நாட்டினரும் அரபிக் கடல் மற்றும் வங்கக் கடல் மூலம் இந்த ஏரியில் வந்திறங்கி, அந்தப் பகுதியில் தங்கள் குடியேற்றத்தையும் அமைத்த பெருமையும் இந்த ஏரிக்கு உண்டு.

உப்புத் தன்மை கொண்ட இந்த ஏரிக்கு ஆரணி ஆறு, கலங்கி ஆறு, ஸ்வர்ணமுகி ஆறு ஆகியவற்றில் இருந்து நீர் வருகிறது.

இந்த ஏரியில் முல்லெட்ஸ், கேட் பிஷ் ஆகிய ரக மீன்கள் மிக அபரிமிதமாகக் காணப்படுகின்றன. இந்த ஏரியில் மீன் பிடித்து சுமார் 50,000 மீனவக் குடும்பங்கள் பிழைத்து வருகின்றன.

மேலும் டைகர் பிரான்ஸ் மற்றும் ஒயிட் பிரான்ஸ் எனப்படும் இறால் வகை மீன்களும் மிக அதிக அளவில் கிடைத்து வருகின்றன.

இந்த மீன்கள், இறால்கள், நண்டுகளை சார்ந்து இப் பகுதியில் ஆயிரக்கணக்கான நாரைகள், கொக்குகள், கூழைக் கடா உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பறவையினங்கள் உள்ளன. மேலும் ரஷ்யாவின் சைபீரிய பனிப் பிரதேசம் உள்பட பல நாடுகளில் இருந்தும் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பறவைகள் இந்த ஏரியை நாடி வருகின்றன. இதனால் இந்த ஏரி பறவைகள் சரணாலமாகவும் விளங்குகிறது.

ஆனால், இயற்கையாகக் கிடைக்கும் இறால் மீன்களை விட இந்த ஏரியில் செயற்கையாக இறால் உற்பத்தியிலும் சில பண முதலைகள் இறங்கியதால் தான் பிரச்சனை ஆரம்பித்தது.

செயற்கை இறால் உற்பத்திக்கு இந்த ஏரியின் நீரும் சூழலும் மிக ஏற்றதாக அமைந்துள்ளதால் ஏராளமானோர் போட்டி போட்டுக் கொண்டு இங்கு இறால் உற்பத்தியில் இறங்கிவிட்டனர். இதனால் இதன் இயற்கைச் சூழல் கெட ஆரம்பித்தது.

மேலும் எல்லையி்ல் அமைந்துள்ளதால் இந்த ஏரியை பராமரிப்பதில் தமிழகமும் ஆந்திராவும் உரிய கவனம் செலுத்தவில்லை. இதனால் தூர் வாரப்படாமல் ஏரியின் ஆழம் குறைந்து கொண்டே வருகிறது. மேலும் ஏரியின் நடுவே ஆங்காங்கே மணல் திட்டுக்களும் எட்டிப் பார்க்க ஆரம்பித்துவிட்டன. நிலைமை இப்படியே போனால், ஏரிக்கு நடுவே மிகப் பெரிய தீவே உருவாகிவிடும் என்கிறது சர்வதேச இயற்கை நிதியம்.

மேலும் சென்னை நகரின் தொழி்ற்சாலைகளில் இருந்து வெளியேறும் ரசாயனங்கள் கொண்ட கழிவு நீரும் இந்த ஏரியை அழிப்பதில் முக்கிய பங்கு வகித்து வருகின்றன.

இதனால் இதை '2010ல் மிக ஆபத்தில் உள்ள ஏரியாக' சர்வதேச இயற்கை நிதியம் அறிவித்துள்ளது.

ஏரியை காக்கும் முயற்சிகளி்ல் Centre for Research on new International Economic Order (CReNIEO) அமைப்புடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளி்ல் சர்வதேச இயற்கை நிதியம் ஈடுபட்டுள்ளது. முதல் கட்டமாக இந்த ஏரியில் மாங்குரோவ் காடுகளை வளர்த்து அதன் இயற்கைச் சூழலைக் காக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment